கோவில்பட்டியான் : அதலைக்காய், சிறுகிழங்கு, தீக்குச்சி, கடலைமிட்டாய் எங்கள் கரிசல் மண்ணின் அடையாள வாசனைகள். இதேபோல சின்ன வயதில் இருந்தே அம்மாவின் வியர்வை படிந்த ஜாக்கெட்டின் வாசனை,ரூபாய் தாளின் வாசனை, வேட்டை நாய் மேல் வரும் வாசனை, ஆட்டுக் கொட்டாரங்களில் புலுக்கையின் வாசனை, சாணிகளை கரைத்து மொழுகிய வீட்டு முற்றத்தின் வாசனை, பஜாரில் காபிக்கொட்டைகளை வறுக்கும் வாசனை, மஞ்சள், மல்லித்தலை மற்றும் மிளகாய் வற்றல் போன்றவை ரைஸ் மில்லில் அரைபடும் போது வரும் வாசனை, புதுத்துணியின் வாசனை, இவைகளுக்குள்தான் எப்பொழுதும் என் ஆன்மா சுழன்று கொண்டே இருக்கும். பக்கங்களை திருப்பினால் அப்பளம் போல் உடையும் பழைய புத்தகத்தின் வாசனை ரொம்ப பிடிக்கும். இப்படியாக எல்லாமும் வாசனையாக உழன்று நினைவுகளாக இருந்தபோது,மறக்கமுடியாத நினைவுகளை என் வாழ்வில் உருவாக்கியது பழைய புத்தக கடைதான். வடக்கே கிருஷ்ணர் கோவில், தெற்கே செண்பகவல்லியம்மன் கோவில், மேற்கே பழைய பேருந்து நிலையம், கிழக்கே ரயில் நிலையம் இணையும் நாற்சந்தியில் ( நான்கு சாலை இணையும் இடத்தில்) கிருஷ்ணர் கோவில் போகும் வழியில் அந்த பழைய புத்தக கட...