கொரோனா(கட்டுரை)
ஈமச்சடங்கு :
"பொம்பளைக்கு மானம் தான் பெரிசு, அவ ஊசுரு போனா மட்டும்... இந்த மானம் இல்லாம போயிரும்மா... என்ன? அவ மானம் நம்மளால போய்ர கூடாது பாரு".அதான், சேலைய கழறாத மாறி இறுக்கி கட்டி விட்டுரணும்.
அதுபோக "எட்டுக்கட்டு" கட்டி விடணும். [வாய்க்கட்டு, நாடிக்கட்டு,தலைக்கட்டு, கைக்கட்டு, தொப்புள் கட்டு கோவணக்கட்டு முழங்கால் கட்டு,கால் கட்டு]
தலை வடக்கையும் கால் தெக்காணிக்க பார்த்த மாறி படுக்க வச்சுரனும். (படுத்து கிடந்த தாயின் மீது ஏறி, தொங்க விடப்பட்ட பச்சிலைகளை கடித்து இழுக்க முற்பட்டது அந்த ஆட்டுக்குட்டி.) சுற்றுப்புரத்தில் மாலை அணிவித்தல், பறை அடித்தல், ஒப்பாரி வைத்தல் மற்றும் பாடல் பாடுதல், பாடை கட்டுதல் அதனை அலங்கரித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதில் இறந்தவருக்கு துணி, பொருள், பணம் மெய்யாக கொடுக்கப்படும், காகிதத்தில் குறித்து வைக்கப்படும். இதனை 'கட்டை மொய்' மற்றும் 'இழவு பணம்' என்பர். இவ்விடத்தில் இருந்து நிகழ்வுகள் நிகழ்த்துதலாக மாறுகிறது. இதன்பின் சடங்குகளாக உருப்பெருகிறது. தாய்வழி உறவுமுறைல இருந்துதான் பொருள் வரும், இதைதான் "கோடி"ன்னு சொல்லுவாக, இதில் அம்மா வழி உறவுகள் கொடுக்கும் பொருள்கள் 'பிறந்து அறுத்த கோடி', அப்பா வழி உறவுகள் கொடுக்கும் பொருட்கள் 'புகுந்து அறுத்த கோடி'. ஊரார் விதவையான பெண்ணுக்கு, வழங்கும் வெள்ளை துணியை 'வெள்ளை கோடி' என்பர். கோடியில் எடுத்துவரும் நீர் மற்றும் பொருட்கள் மூலம் இறந்தவரை, மீண்டும் குளிப்பாட்டவும் மற்றும் அலங்கரிக்கவும் செய்வர். "நீர் மாலை "என்பது இறந்தவரின் சொந்தம் கொண்டாடிகளான பெண்கள் முதலிலும், அதன்பின் ஆண்களும் பொது நீர்பிடிப்பு (அ) நீர்வரத்து பகுதிகளுக்கு சென்று, குளித்து, தீருநீறு பூசிக் கொள்வார்.இதில் மகள்,மருமகள் மற்றும் மூத்தமகன், இளைய மகன் என்ற வரிசை பின்பற்றியே குளிப்பர்.வயது மூத்தோருக்கு கும்பா, இளையோருக்கு செம்பு, காரணம் வயது பாகுபாடு மற்றும் முன்னுரிமை. அதுமட்டுமின்றி, கையோடு எடுத்து வந்த நீரை, பெண்கள் பிணத்தின் உடல் முழுவதிலும் ஆண்கள் காலில் மட்டும் சுற்றி ஊற்றுவார். "மாவு விளக்கு" பேரன் மற்றும் பேத்திகளால் மட்டுமே செய்யப்படும் முறை, பச்சரிசி (அ) அரிசி மாவில் நீர் இட்டு பிணைந்து, குழியாக்கி அதனுள் எண்ணெய்யை நிரப்பி, திரி வைத்து விளக்கு ஏற்றப்படும்.'ஸ்ரீ தேவி வாங்குதல்' குடும்பத்தில் இறக்கும் மூத்த (அ) முதல் ஆளுக்கு வீட்டிற்கு வந்த ஸ்ரீதேவி எனப்படும். மருமகளால் மட்டுமே செய்யபடும் முறை, நெல்மணிகளால் நிரப்பப்பட்ட மரக்காணம் (அ) உலக்கு மீது ஏற்றப்படும் விளக்கை மரக்கா விளக்கு '(அ) 'நாழி விளக்கு' என்பர். மாவு மற்றும் மரக்கா விளக்கு அதற்குரிய நபர்களால், மூன்று முறை இறந்தரை சுற்றி வலம் வருவார். இவ்விரு விளக்குகளும் இறந்தவர் தலைமாட்டில் இடது மற்றும் வலது புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும். மாவு விளக்கு எரிந்த பின், பிறருக்கு உண்ண வழங்கப்படும். இல்லையேல், மாடுகளுக்கு சாப்பிட அளிக்கப்படும். 'மரக்கா விளக்கு' பிணம் வீதிக்கு எடுத்து செல்ல பட்டபின், வீட்டிற்குள் கொண்டு செல்லபட்டு, அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் 11,16,30 நாட்கள் வைத்து வழிபடுவர். (கொக்...கொக்... வீர்... என சத்தமிட்டபடி, தலையை உயர்த்தி பார்க்கிறது, கோழிக்குஞ்சு. என்ன ஒரு குஞ்சுதா... நிக்கினு பாக்கியா.? இந்த காக்காதா.. இங்க வந்து போட்டிருச்சு. என் சேலைக்குள்ளயே இருக்கனும்னா எப்படி..! அழிச்சாட்டியம் பண்ணுது, வாய்லயே இடிக்கனும்.) கள்ள கபடமற்ற சிரிப்புடன் மீண்டும் கதையை தொடர்கிறாள்.. கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் சடங்கு. தாலி அறுத்தல் 'மனைவி இறந்து கணவர் உயிரோடு இருந்தால், தாலியை அவரது கையில் ஒப்படைப்பார்கள். மாற்றாக கணவன் இறந்தால், மனைவி புதுப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு வட (அ) தென் திசையை நோக்கியபடி அமர வைத்து, வளையல்கள் உடைக்கப்பட்டு, நெற்றிக் குங்குமம் அழிக்கப்பட்டு, தலையில் வைத்த பூக்கள் பீய்த்து எறியப்பட்டு, இறுதியாக தாலி அறுக்கப்படும். அறுக்கப்பட்ட தாலியை, கணவனின் காலில் உள்ள இரு பெருவிரல் (அ) கட்டை விரலில் கட்டி விடுவார்கள். இப்படியாக வீட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் குழந்தைகளை,
'ஏந் தாலிய அறுக்க...தான். இந்த வயித்துல வந்து பொறந்தியா?'
என தாயார் திட்டும் வழக்கம் உண்டு. 'சூரை விடுதல்' தகப்பன் இறந்த பட்சத்தில் (எ.கா அண்ணன் மற்றும் தங்கை) அவரின் மகன் மற்றும் மகனின் வாரிசுகள் ரதத்தின் முன் நின்று காசு பழம் மற்றும் முறுக்கு (இதர பலகாரங்கள்) போன்றவை வீசுவர். மகள் மற்றும் மகள் பெற்ற பிள்ளைகள் ரதத்தின் பின் பூக்களை பீய்த்து எறிந்தவாறு வலம் வருவர். குடம் உடைத்தல் வீதி முச்சந்தி (அ) தெருமுனை இறுதியில், மகள் முறையில் இருப்பவர்கள் மட்டும் செய்யும் சடங்கு (இதனுள் மருமகள் அடக்கம் இல்லை) பிணத்தை 'மூன்று முறை' சுற்றி பானை உடைக்கபடும். இவ்விடத்தில் இருந்து பெண்கள் யாரும் பிணத்தை தொடர கூடாது. இக்கணம் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும். சுடுகாட்டில் நுழைந்தபின், பெற்ற மகன்களுக்கு தலை மற்றும் கைகளில் மயிர் வழிக்கப்படும். இறந்தவர் பசியுடன் இருக்க கூடாது. என்பதிற்காக, பால் மற்றும் வாய்கரிசி இடப்படும். இப்படியாக பானை ஏந்தி நடக்கும் மகனின் மூன்று சுற்றில் ஒவ்வொரு சுற்றுக்கும் துளைகள் இடப்பட்டு பானை உடைக்கப்படும். இறுதியில் முகம் பார்த்த பின், எரிப்பாதாய் இருந்தால் சாணம் மற்றும் கட்டைகளால் அடுக்கப்பட்ட தளத்தில் படுக்க வைத்து, கொள்ளி வைக்கப்படும். மண்ணில், புதைப்பதாக இருந்தால், மூன்று முறை மண் அள்ளி வீசுவர்.
தொடக்கத்திலிருந்து, இறுதிவரை எல்லா ஈமச்சடங்கிலும் வலம் வருவது "நெற்றிக்காசு ஒரு ரூபாய் நாணயம்".
அட...ஏம்..லேய்..... நீ வேற, வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வரவே நேரம் சரியா இருக்கும், வந்த உடனே குளிச்சுட்டு துணிய மாத்திக்குவேன், அவ்வளவுதான்..! கோட்டிக்காரப்பயலே.. இந்த வேலைய செய்ரது கௌரவம், இதனால் சமுதாயத்துல நமக்கு மரியாதையும், மதிப்பும் கூடும், என்னை எல்லோரும் மதிப்பாத்தான் நடத்துராக.. அதுல ஏதும் கொறவு இருக்காது. நா..! காசு ஏதும் வாங்க மாட்டேன், அவுகளா ஏதும் பிரியபட்டு சேலை தருவாக, வாங்கி வச்சுக்குவேன்.
'இறப்புனா இறப்புதான்' அதுக்கு எதும் விளக்கம் வேணுமா ?.
என் வயசுக்கு எம்புட்டு சாவை பார்த்துருக்கேன், விபத்துல செத்தாக் கூட மூட்டை கட்டி வச்சு மனசார அழுது தீர்த்து புடலாம்.
இந்த கொரோனாதான் ரொம்ப மோசமான கழுத.., சாவுலயே நல்ல சாவு ? கெட்ட சாவுன்னு... இருக்கு. இது என்ன ரகம்னே தெரியல ? ஒட்டுவாரொட்டி மாறி ஒட்டிக்கிது. பெத்த பையன் செத்தாக் கூட "மாஸ்க்" போட்டுத்தான் அழ சொல்லுறானுங்க. பெத்தவுகளும் தொட முடியாம, மத்தவுகளும் பக்கத்துல போக முடியாம, உனக்கு வந்திருமோ? எனக்கு வந்துருமான்னு? கண்ணுல பயத்த வச்சுட்டுல்ல இருக்க வேண்டிருக்கு.
அய்யய்யோ மறந்துட்டேன் நேரமாச்சுலே..? ஒரு வாய் சாப்பிட்டு போ லேய்..
Comments
Post a Comment